Thursday, April 18, 2013

தட்டானின் ஒரு முனையில் உலகம் தொடங்கியது

படம் : விக்கிபீடியா 

உலகம் ....... மதங்கள் சொல்வது போல ஒரே நாளில் தொடங்கியதா ? இல்லை அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பில் இருந்து தோன்றியதா ? என்பதன் ஆராய்ச்சியை விட்டுவிட்டு என் உலகம் தட்டானின் ஒரு முனையில் தொடங்கியது !

சிறுவயதில் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் சட்டையில்லா தேகத்தோடு நான் அலைந்து திரிகையில் மழைமேகம் வாடிப்போன ஒரு பொழுதில் தட்டான் பிடிக்க கற்றுக்கொண்டேன் , பிடித்த தட்டானின் பின்புறம் நூலை கட்டி அதை பறக்க விடுவதில் தொடங்கியது என் உலகம் , பிறிதொரு நாள் தட்டானாய் வாழ்ந்து பார்க்க எண்ணி என் காலில் கயிறு கட்டி நடந்து பார்த்தேன் , அக்கணம் தட்டானின் வேதனைகளை புரிந்துகொண்ட நான் , இனி தட்டான் பிடிப்பதில்லை பிடித்தாலும் நூல் கட்டி விடுவதில்லை என்று மனக்கோட்டையில் சத்தியம் செய்து கொண்டேன் !

அந்நேர சத்தியங்கள் எதையும் நான் வாழ்வில் கடைபிடித்தது இல்லை , மீண்டும் தட்டான் மீது என் வன்முறையை தொடங்கத் தான் செய்தேன்

புதியதாய் பிறந்த ஊரொன்றில் தொடங்கப்பட்ட பள்ளியில் என்னை சேர்த்து விடுவதென என் பெற்றோர் முடிவெடுத்து , என்னை தட்டான் தோட்டத்தில் இருந்து பிரித்து சென்றனர்

அங்கே வெறும் கான்கீரீட் காடுகள் , அதன் சிமென்ட் வாசம் தான் மழைக்காலத்தில் என் தோழன் , வெய்யில காலத்திலும் தரையில் படுத்துக்கொண்டு சிமென்ட் வாசத்திலே வாழப்பழகினேன் !

என் உலகம் வேறுபாடானது , அதன் உள்ளே சஞ்சரித்தால் கஞ்சா இல்லாத ராஜபோதையில் வாழ முடியும் என கற்றுக்கொண்டேன் , கடவுளுக்கு தேவையானதை விட அவன் படைப்புக்கு தேவையானதை நான் கொடுத்து விட்டு போய்விட வேண்டும் !

என் உலகம் தட்டானில் தொடங்கியது போல பட்டாம்பூச்சியில் நிறைவடைந்தால் என்னைவிட நிறைவுற்றவன் எவனுமில்லையென அடுத்த பிறப்போ , சொர்க்க நரகமோ அங்கே போய் எடுத்துச் சொல்வேன் !

3 comments:

  1. வித்தியாசமான சிந்தனை... ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete