Thursday, April 18, 2013

தட்டானின் ஒரு முனையில் உலகம் தொடங்கியது

படம் : விக்கிபீடியா 

உலகம் ....... மதங்கள் சொல்வது போல ஒரே நாளில் தொடங்கியதா ? இல்லை அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பில் இருந்து தோன்றியதா ? என்பதன் ஆராய்ச்சியை விட்டுவிட்டு என் உலகம் தட்டானின் ஒரு முனையில் தொடங்கியது !

சிறுவயதில் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் சட்டையில்லா தேகத்தோடு நான் அலைந்து திரிகையில் மழைமேகம் வாடிப்போன ஒரு பொழுதில் தட்டான் பிடிக்க கற்றுக்கொண்டேன் , பிடித்த தட்டானின் பின்புறம் நூலை கட்டி அதை பறக்க விடுவதில் தொடங்கியது என் உலகம் , பிறிதொரு நாள் தட்டானாய் வாழ்ந்து பார்க்க எண்ணி என் காலில் கயிறு கட்டி நடந்து பார்த்தேன் , அக்கணம் தட்டானின் வேதனைகளை புரிந்துகொண்ட நான் , இனி தட்டான் பிடிப்பதில்லை பிடித்தாலும் நூல் கட்டி விடுவதில்லை என்று மனக்கோட்டையில் சத்தியம் செய்து கொண்டேன் !

அந்நேர சத்தியங்கள் எதையும் நான் வாழ்வில் கடைபிடித்தது இல்லை , மீண்டும் தட்டான் மீது என் வன்முறையை தொடங்கத் தான் செய்தேன்

புதியதாய் பிறந்த ஊரொன்றில் தொடங்கப்பட்ட பள்ளியில் என்னை சேர்த்து விடுவதென என் பெற்றோர் முடிவெடுத்து , என்னை தட்டான் தோட்டத்தில் இருந்து பிரித்து சென்றனர்

அங்கே வெறும் கான்கீரீட் காடுகள் , அதன் சிமென்ட் வாசம் தான் மழைக்காலத்தில் என் தோழன் , வெய்யில காலத்திலும் தரையில் படுத்துக்கொண்டு சிமென்ட் வாசத்திலே வாழப்பழகினேன் !

என் உலகம் வேறுபாடானது , அதன் உள்ளே சஞ்சரித்தால் கஞ்சா இல்லாத ராஜபோதையில் வாழ முடியும் என கற்றுக்கொண்டேன் , கடவுளுக்கு தேவையானதை விட அவன் படைப்புக்கு தேவையானதை நான் கொடுத்து விட்டு போய்விட வேண்டும் !

என் உலகம் தட்டானில் தொடங்கியது போல பட்டாம்பூச்சியில் நிறைவடைந்தால் என்னைவிட நிறைவுற்றவன் எவனுமில்லையென அடுத்த பிறப்போ , சொர்க்க நரகமோ அங்கே போய் எடுத்துச் சொல்வேன் !

Friday, April 12, 2013

வாழ்க்கை என்பது கடல்

கடல் எப்படி எல்லா உயிரினங்களின் பிறப்பிடமோ அதே போல் கடல் தான் இன்று பல உயிர்களின் தாய் , மனிதன் என்பவன் கடலில் தோன்றிய ஒரு பொட்டு உயிரில் இருந்து பரிணமித்து வந்தவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை

கடலின் உப்பு காற்றை போல நம் வாழ்விலும் உப்பு நிறைந்த படலங்கள் இருக்கத்தான் செய்கிறது , அதற்காக கடலை கொண்டாடமல் இருக்கிறோமோ ? இல்லை கடல் கரையை தான் ரசிக்காமல் இருக்கிறோமா ?.
மனதில்  பல சஞ்சலங்களை நிரப்பிக்கொண்டு கடற்கரை வரை போய் வாருங்கள் உங்கள் மனது மெதுவாகும் , கடல் தான் உயிரினங்களின் தாய் , அவளிடம் நாம் எந்த குறையோடு போய் நின்றாலும் நம்மை அப்படியே அரவணைத்து நம் சோகம் துடைத்து அனுப்புவாள்

கடலில் விஷ மீன்கள் வாழ்வது போல நம் மனதிலும் , நம் சமூகத்திலும் விஷ எண்ணங்கள், விஷ மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள் , படைப்பின் அற்புதம அப்படி!!! படைப்பிற்கு மலமும் அமுதமும் ஒன்று தான் , இருந்தாலும் விஷத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது நம் கையில் கொடுத்து விட்டு தன் வேலையை பார்க்கிறது படைப்பு

யாருமே இல்லாத ஒரு கடற்கரையில் "ஓஓஓஓஓஒ" என்று கத்திக்கொண்டே ஓடியது உண்டா ?? ..சத்தங்கள் தான் வாழ்வின் உயிர்த்துடிப்பு ,அதனால் தான் நம் ஆதி காலம் முதல் மந்திரங்கள் ஒலி வடிவிலே வந்து கொண்டு இருக்கிறது , சத்தங்கள் நம்மை அப்படியே ஒரு அதிர்வு நிலைக்கு கொண்டு செல்கிறது , நம் அப்பா போடும் சத்தம் நம்மை அப்படியே ஒரு நொடி ஆடாமல் அசையாமல் கட்டி போடுவது இல்லையா ?? ஓடுங்கள் இனிமேல் கடற்கரையில் கத்திக்கொண்டே ஓடுங்கள் தமிழர்களே மெரீனா மட்டுமே கடற்கரை அல்ல உலகில் மனிதனின் கால் தடம் பதியாத கடற்கரை தேடி ஓடுங்கள்

கடலின் அலை எழும்பி வருவத்தை கண் கொட்டாமல் ரசித்து உண்டா , அது ஒரு தியானம் , கடல் அலையின் ஒரு கட்டுக்கோப்பான இசையுடன் வருவதை உங்கள் கண்களால் அலை மீது படர விட்டது உண்டா ?? அப்படியே அலையை போல உங்கள் மனதும் துள்ளி மேல் எழும்பி இறங்கியது உண்டா ?? கவனியுங்கள் கடல் அலை தான் நம் வாழ்வின் மிகப்பெரும் பாடம் , அது எவ்வளவு மேல் எழுகிறதோ அவ்வளவு கீழ் விழுகிறது , வெற்றியோ தோல்வியோ நிரந்தரம் இல்லை என்று அது காலம் காலமாக சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா ??

கடல் நீரை சுவைத்து உண்டா ? அதை சுவைத்தால் அப்படியே உப்பாக இருக்கும் , அதே கடல் நீர் தான் வானத்திற்கு சென்று வடிகட்டப்பட்டு மழையாக வருவது உங்களுக்கு தெரியுமா ???

கடற்கரையின் நறுமணம் அறிவீர்களா ?? அது மழைவரும் மண்வாசனை போல் அல்லாமல் , மீன் வாசனையும் சேர்ந்து அடிக்குமே அதை  நீங்கள்  மூக்கை தீட்டி வைத்துக் கொண்டு முகர்ந்து அப்படியே மெய் மறந்தது உண்டா??

கடலில் நிர்வாணமாக குளித்து உண்டா ?குறைந்தபட்சம்  வெறும் உள்ளாடையோடு குளித்தது உண்டா ?? கொஞ்சம் உள்ளே போனாலும் உயிர் போய் விடும் என்ற பயம் தாண்டி அலையோடு விழுந்து பிரண்டு மண்ணோடு உருண்டு குளித்து சிரித்து உண்டா ?? குளியுங்கள் , கடலில் குளித்து மகிழுங்கள்

இப்போது தானே கரையையே பார்த்து இருக்கிறோம் , இன்னும் இருக்கிறது உறவே கடலுக்குள் சென்று ,கடல் கடந்து , ராஜகுமாரியை புணர்ந்து, அதையும் தாண்டி அடைய வேண்டியது இருக்கிறது, என்னோடு பயணிப்பீர்கள் தானே ......