Saturday, October 26, 2013

மரணம் பற்றிய நம் பயம்

மரணம் பற்றி என்ன தெரியும் நமக்கு ? ஆரம்பத்திலே கேள்வியோடு தொடங்குவது தான் வாழ்க்கை அதே போல தான் நானும் மரணத்தை கேள்வியோடு தொடங்குகிறேன் , மரணம் என்பது என்ன ? மரணத்திற்கு அப்புறம் நாம் எங்கே செல்கிறோம் ? மரணம் தான் முடிவா ? இப்படி ஆயிரம் கேள்விகளை நான் எனக்குள்ளே வைத்துக்கொள்கிறேன் .

கப்பல் துறையில் வேலைக்கு சென்று திரும்பும் என் நண்பர்களிடம் நான் தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி "மச்சி ROUGH WEATHER வந்துச்சா? " என்பது தான் . அதில் என்ன இருக்கும் என்று கேட்கிறீர்களா ..கடலின் கோரத்தாண்டவத்தில் கப்பல் சின்ன பொம்மை போல ஆகிவிடும் ..நாம் இங்கே மழை வரும் என கொண்டாடும் காற்று அழுத்த தாழ்வு நிலை கடலில் ஒரு ருத்திர தாண்டவமாக இருக்கும் (கப்பல் என்ன ஆகும் என்பதை கடைசியில் வீடியோவாக இணைத்து உள்ளேன்).. சரி நான் கேட்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? இருக்கிறது ! மரண பயம் என்று சொல்வோமே அதை நாம் உணர முடியும் அந்த நேரத்தில் ..ஆனால் அதே கடலிலே பழகிப்போனவர்களுக்கு அந்த பயம் நீங்கி விடும் ...இவ்வளவு தான் என்று ஆகி விடும்

"சாவு பயத்த காட்டினாய்ங்க பரமா ..ஒரு பொம்பள காலுல விழ வச்சுடாய்ங்க" என்று சுப்பிரமணியரம் படத்தில் ஜெய் சொல்லும் போது எதார்த்தமாகவே பலி உணர்ச்சியை விட மரண பயம் வந்துவிடும் ..அதே தான் மரணம் என்பது தான் நம் உச்சக்கட்ட பயம் ..நடுநசியில் ஒரு நாய் உங்களை துரத்தினால் உங்களுக்கு தெரியும் நீங்கள் இறந்து போக மாட்டீர்கள் என்று ஆனாலும் வலி குறித்த பயம் ..

பயம் என்பதை தாண்டி நமக்கு ஒன்று நிச்சயம் தெரியும் என்றாவது ஒரு நாள் இறந்து விடுவோம்  என்று ஆனாலும் என்றுமே வாழும் ஒரு உயிரினம் போல நம்முடைய பயத்தை மறந்து கேடு செய்கிறோம் ,,இந்த பத்தியை நீங்கள் உன்னிப்பாக படித்தால் கடவுள் இருப்பார் ...ஆம் கடவுளின் தேவை நமக்கு மரணம் குறித்த அச்சத்தில் தான் இருக்கிறது ..கடவுள் உண்டு , கடவுள் இல்லை இரண்டிலும் பயம் இருக்கிறது ...

மரணித்த பிறகு நாம் என்ன ஆவோம் என்று யாரேனும் சொல்லிவிட்டால் நாம் அவரையே குருவாக ஏற்றுக்கொள்வோம் ..மரணித்த பிறகு என்ன ஆவோம் என்று ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தால் நாம் அதையே மதக்கோட்பாடு என்கிறோம் ...சொர்க்கம் ,நரகம் என இரண்டுமே மரணத்திற்கு அப்பால் என்ன என்ற நம் கேள்விக்கான சப்பைக்கட்டு பதில்கள் அவ்வளவு தான்

ஆவியுடன் பேசுகிறேன் , பேய்கள் என யாரேனும் சொன்னால் நாம் உடனே ஈர்க்கப்படுவோம் , இது மனிதனின் காரண அறிவுக்கு தீனி போடும் செயல் ..அப்போ இறந்தவங்க பேய் ஆகிருவாங்களா ? என்ற கேள்வி தான் அந்த ஈர்ப்புக்கும் காரணம்

என்னை அதிகம் பாதித்த மரணம் என்றால் இது வரை எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும் (ஏன் என்றால் என்னை அதிகம் பாதிக்கும் மரணம் என் மரணமாகத் தானே இருக்க முடியும் ) ..இரு வாரங்களுக்கு முன்னாள் மெரீனா கடற்க்கரையில் ஒரு வெள்ளை உருவம் உருண்டு கிடந்ததது ...எல்லோரும் கூடி நின்று பார்த்தார்கள் ..ஆம் அது ஒரு பிணம் (அவருக்கு பெயர் இருந்து இருக்கலாம் ) ..கடலில் மீன் உண்ட மிச்சமாக உப்பு தண்ணீருக்கு ஊதிய ஒரு உடல் . அந்த மரணம் கூட என்னை சிறிது அளவு பாதித்தது ...ஆனால் நான் இன்னும் விடை கண்ட பாடில்லை

மரணித்த எந்த உயிரும் (உயிருக்கு மரணம் உண்டா என்பதை ஆன்மீகவாதிகள் சொல்வார்கள் எனக்கு தெரியாது ) என்ன ஆகிறது என்று நமக்கு தெரியாது ஆனால் இது எதோ ஒரு சுழற்சி என்ற அளவில் மட்டுமே மரணத்தை நாம் அணுகி வருகிறோம் ...மனித உடலின் இயக்கம் நின்று விட்டால் அறிவியல் அதை மரணம் என்று சொல்கிறது ..ஆனாலும் மரணித்த ஒரு மனித உடலிலும் முடி வளரும் என்ற கூற்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது ..அப்ப எப்ப தான்யா மனுஷன் முழுசா சாவான்?

சிகரட் , மது இது இரண்டும் மரணத்தை வர வைக்கும் என்று தெரிந்தும் நான் உட்பட பல மனித ஜந்துக்கள் அதில் ஆர்வமாக இருக்க என்ன காரணமாக இருக்கும் என்பதை மரணம் தான் தீர்மானித்து சொல்ல வேண்டும்

மரணம் பற்றி என் விடை இது தான்
 

மரணம் என்பது என்ன என்ற தேடலில் வாழ்க்கையை தொலைப்பதை விட்டுவிட்டு மரணம் நமக்கு நிச்சயம் வரும் என்ற எண்ணத்தில் வாழ்ந்தாலே நமக்கு வாழ்க்கை இனிப்பாக இருக்கும்


Thursday, April 18, 2013

தட்டானின் ஒரு முனையில் உலகம் தொடங்கியது

படம் : விக்கிபீடியா 

உலகம் ....... மதங்கள் சொல்வது போல ஒரே நாளில் தொடங்கியதா ? இல்லை அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பில் இருந்து தோன்றியதா ? என்பதன் ஆராய்ச்சியை விட்டுவிட்டு என் உலகம் தட்டானின் ஒரு முனையில் தொடங்கியது !

சிறுவயதில் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் சட்டையில்லா தேகத்தோடு நான் அலைந்து திரிகையில் மழைமேகம் வாடிப்போன ஒரு பொழுதில் தட்டான் பிடிக்க கற்றுக்கொண்டேன் , பிடித்த தட்டானின் பின்புறம் நூலை கட்டி அதை பறக்க விடுவதில் தொடங்கியது என் உலகம் , பிறிதொரு நாள் தட்டானாய் வாழ்ந்து பார்க்க எண்ணி என் காலில் கயிறு கட்டி நடந்து பார்த்தேன் , அக்கணம் தட்டானின் வேதனைகளை புரிந்துகொண்ட நான் , இனி தட்டான் பிடிப்பதில்லை பிடித்தாலும் நூல் கட்டி விடுவதில்லை என்று மனக்கோட்டையில் சத்தியம் செய்து கொண்டேன் !

அந்நேர சத்தியங்கள் எதையும் நான் வாழ்வில் கடைபிடித்தது இல்லை , மீண்டும் தட்டான் மீது என் வன்முறையை தொடங்கத் தான் செய்தேன்

புதியதாய் பிறந்த ஊரொன்றில் தொடங்கப்பட்ட பள்ளியில் என்னை சேர்த்து விடுவதென என் பெற்றோர் முடிவெடுத்து , என்னை தட்டான் தோட்டத்தில் இருந்து பிரித்து சென்றனர்

அங்கே வெறும் கான்கீரீட் காடுகள் , அதன் சிமென்ட் வாசம் தான் மழைக்காலத்தில் என் தோழன் , வெய்யில காலத்திலும் தரையில் படுத்துக்கொண்டு சிமென்ட் வாசத்திலே வாழப்பழகினேன் !

என் உலகம் வேறுபாடானது , அதன் உள்ளே சஞ்சரித்தால் கஞ்சா இல்லாத ராஜபோதையில் வாழ முடியும் என கற்றுக்கொண்டேன் , கடவுளுக்கு தேவையானதை விட அவன் படைப்புக்கு தேவையானதை நான் கொடுத்து விட்டு போய்விட வேண்டும் !

என் உலகம் தட்டானில் தொடங்கியது போல பட்டாம்பூச்சியில் நிறைவடைந்தால் என்னைவிட நிறைவுற்றவன் எவனுமில்லையென அடுத்த பிறப்போ , சொர்க்க நரகமோ அங்கே போய் எடுத்துச் சொல்வேன் !

Friday, April 12, 2013

வாழ்க்கை என்பது கடல்

கடல் எப்படி எல்லா உயிரினங்களின் பிறப்பிடமோ அதே போல் கடல் தான் இன்று பல உயிர்களின் தாய் , மனிதன் என்பவன் கடலில் தோன்றிய ஒரு பொட்டு உயிரில் இருந்து பரிணமித்து வந்தவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை

கடலின் உப்பு காற்றை போல நம் வாழ்விலும் உப்பு நிறைந்த படலங்கள் இருக்கத்தான் செய்கிறது , அதற்காக கடலை கொண்டாடமல் இருக்கிறோமோ ? இல்லை கடல் கரையை தான் ரசிக்காமல் இருக்கிறோமா ?.
மனதில்  பல சஞ்சலங்களை நிரப்பிக்கொண்டு கடற்கரை வரை போய் வாருங்கள் உங்கள் மனது மெதுவாகும் , கடல் தான் உயிரினங்களின் தாய் , அவளிடம் நாம் எந்த குறையோடு போய் நின்றாலும் நம்மை அப்படியே அரவணைத்து நம் சோகம் துடைத்து அனுப்புவாள்

கடலில் விஷ மீன்கள் வாழ்வது போல நம் மனதிலும் , நம் சமூகத்திலும் விஷ எண்ணங்கள், விஷ மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள் , படைப்பின் அற்புதம அப்படி!!! படைப்பிற்கு மலமும் அமுதமும் ஒன்று தான் , இருந்தாலும் விஷத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது நம் கையில் கொடுத்து விட்டு தன் வேலையை பார்க்கிறது படைப்பு

யாருமே இல்லாத ஒரு கடற்கரையில் "ஓஓஓஓஓஒ" என்று கத்திக்கொண்டே ஓடியது உண்டா ?? ..சத்தங்கள் தான் வாழ்வின் உயிர்த்துடிப்பு ,அதனால் தான் நம் ஆதி காலம் முதல் மந்திரங்கள் ஒலி வடிவிலே வந்து கொண்டு இருக்கிறது , சத்தங்கள் நம்மை அப்படியே ஒரு அதிர்வு நிலைக்கு கொண்டு செல்கிறது , நம் அப்பா போடும் சத்தம் நம்மை அப்படியே ஒரு நொடி ஆடாமல் அசையாமல் கட்டி போடுவது இல்லையா ?? ஓடுங்கள் இனிமேல் கடற்கரையில் கத்திக்கொண்டே ஓடுங்கள் தமிழர்களே மெரீனா மட்டுமே கடற்கரை அல்ல உலகில் மனிதனின் கால் தடம் பதியாத கடற்கரை தேடி ஓடுங்கள்

கடலின் அலை எழும்பி வருவத்தை கண் கொட்டாமல் ரசித்து உண்டா , அது ஒரு தியானம் , கடல் அலையின் ஒரு கட்டுக்கோப்பான இசையுடன் வருவதை உங்கள் கண்களால் அலை மீது படர விட்டது உண்டா ?? அப்படியே அலையை போல உங்கள் மனதும் துள்ளி மேல் எழும்பி இறங்கியது உண்டா ?? கவனியுங்கள் கடல் அலை தான் நம் வாழ்வின் மிகப்பெரும் பாடம் , அது எவ்வளவு மேல் எழுகிறதோ அவ்வளவு கீழ் விழுகிறது , வெற்றியோ தோல்வியோ நிரந்தரம் இல்லை என்று அது காலம் காலமாக சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா ??

கடல் நீரை சுவைத்து உண்டா ? அதை சுவைத்தால் அப்படியே உப்பாக இருக்கும் , அதே கடல் நீர் தான் வானத்திற்கு சென்று வடிகட்டப்பட்டு மழையாக வருவது உங்களுக்கு தெரியுமா ???

கடற்கரையின் நறுமணம் அறிவீர்களா ?? அது மழைவரும் மண்வாசனை போல் அல்லாமல் , மீன் வாசனையும் சேர்ந்து அடிக்குமே அதை  நீங்கள்  மூக்கை தீட்டி வைத்துக் கொண்டு முகர்ந்து அப்படியே மெய் மறந்தது உண்டா??

கடலில் நிர்வாணமாக குளித்து உண்டா ?குறைந்தபட்சம்  வெறும் உள்ளாடையோடு குளித்தது உண்டா ?? கொஞ்சம் உள்ளே போனாலும் உயிர் போய் விடும் என்ற பயம் தாண்டி அலையோடு விழுந்து பிரண்டு மண்ணோடு உருண்டு குளித்து சிரித்து உண்டா ?? குளியுங்கள் , கடலில் குளித்து மகிழுங்கள்

இப்போது தானே கரையையே பார்த்து இருக்கிறோம் , இன்னும் இருக்கிறது உறவே கடலுக்குள் சென்று ,கடல் கடந்து , ராஜகுமாரியை புணர்ந்து, அதையும் தாண்டி அடைய வேண்டியது இருக்கிறது, என்னோடு பயணிப்பீர்கள் தானே ......